அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற 29 வயது வாலிபர் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆப்கானிதான் நாட்டில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய சித்திக் மட்டின் என்பவரின் மகனான ஒமர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதலை நடத்தினாரா? என்ற கோணத்தில் அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கொலையாளியின் தந்தையான சித்திக் மட்டின் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அமெரிக்காவில் வசித்தபடியே ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பிவந்த சித்திக், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பல்வேறு விவாத மேடைகளிலும் முன்னர் பங்கேற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
தலிபான்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் இவர் வக்காலத்து வாங்கிய டி.வி. விவாத மேடை நிகழ்ச்சிகளின் தனி தொகுப்புகள் யூடியூப்பில் கூட ஏராளமாக காணக் கிடைக்கிறது. அந்த பதிவுகளில் சித்திக் மட்டினின் புளோரிடா வசிப்பிட முகவரியும், அவரது தபால் பெட்டி மற்றும் கைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகியுள்ள இவரது வீடியோவில் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் சித்திக் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று புளோரிடா இரவு விடுதியில் 50 பேரை சுட்டுக் கொன்ற இவரது மகன் ஒமர் மட்டின், துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே அந்த இரவு விடுதியின் கழிப்பறையில் மறைந்திருந்தபடி கைபேசி மூலமாக போலீசாருடன் பேசியுள்ளான். அப்போது, பாஸ்டன் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை நினைவூட்டிய அவன், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை புகழ்ந்து பேசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த கொலையாளி ஒமரின் தந்தை சித்திக், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ‘எனது மகனின் செயலுக்கும் அவன் சார்ந்திருந்த மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது’ என குறிப்பிட்டுள்ளார்.
‘இதுபோன்ற கொலைவெறி தாக்குதலில் அவன் ஈடுபடுவான் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த செய்தியை அறிந்து ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ந்துப்போய் இருப்பதைப்போல் நானும் எனது குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். எனினும், அந்த தாக்குதலுக்கும் அவன் சார்ந்திருந்த மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
சில மாதங்களுக்கு முன்னர் மியாமி நகரில் ஓரினச் சேர்க்கையாளர் ஜோடி பொது இடத்தில் முத்தம் கொடுப்பதை அவன் பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளான். அதுவும் அவனது சிறுவயது மகனின் கண்ணெதிரே நடந்த அந்த அநாகரிக செயல் ஒமரின் மனதில் ஆழமாக பதிந்துப் போய் இருந்தது’ என்று பேட்டியளித்துள்ள சித்திக் மட்டின், தற்போது தனது மகனின் கொலைவெறி தாண்டவத்துக்கு புதிய நியாயம் கற்பிக்க தொடங்கியுள்ளார்.