வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். முச்சக்கரவண்டியில் ஏறும்போது 150 ரூபா முச்சக்கரவண்டிக் கட்டணம் என்று முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார். பேரூந்து நிலையத்தில வந்து இறங்கியதும் 120 ரூபாயினை இராணுவ வீரர்கள் இருவரும் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து முச்சக்கரவண்டி சாரதி 150ரூபா பணத்தினைத்தருமாறு கேட்டு சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து முச்சக்கரவண்டி சாரதி மீது மதுபோதையில் வந்த இராணுவ வீரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்ட முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.