துபாயில் ஆளில்லாத வீடுகளில் நுழைந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை துபாயின் அல் பார்ஷா (Al Barsha) பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்த வேளை, 250,000 திர்ஹாம் பெறுமதியான கடிகாரங்கள் மற்றும் 100,000 திர்ஹாம் பணம் என்பன கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த ஆடம்பர வீடு அமைந்திருந்த இடத்தில் உள்ள எட்டு வீடுகளில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தகவல் வௌியானது.
பின்னர், நான்கு சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருவதற்காக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்த வேளை, பெரும் தொகை துபாய் திர்ஹாம், இலங்கை ரூபாய்கள், தங்கம், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் படி ஐந்தாம் நபரும் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த ஐவரும் ஆடம்பர வீடுகளுக்கு சென்று அழைப்பு மணியை அழுத்திபார்க்கும் போது, எவரும் வெளியில் வராவிட்டால், ஒருவர் சுவர் மீது ஏறி வீடுகளுக்கு உள்ளே சென்று வீட்டின் கதவை திறப்பார். இதன்பின்னர் அடுத்த மூன்று பேரும் வீடுகளுக்கு சென்று கொள்ளைகளில் ஈடுபடுவர். ஐந்தாமவர், வெளியில் காவலுக்கு நிற்பார் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இலங்கையர்களுக்கும் எதிராக துபாய் வதிவிட கொள்கையை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.