வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.
வடமராட்சி கிழக்கில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஷ் (வயது 24) என்ற இளைஞன் கொல்லப்பட்டார்.
“ மணல் கடத்தலில் ஈடுபட்ட இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார். மணல் ஏற்றிய ஹண்டரைப் பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அதன் சாரதி நிறுத்தாது வாகனத்தைச் செலுத்திச் சென்றார். அதனால் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிலேதான் ஹண்டரின் சாரதியான அந்த இளைஞன் கொல்லப்பட்டார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் அன்றைய தினமே உப பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்சீவ் மற்றும் பொலிஸ் கொன்டபில் முதாலிப் மொகமெட் முபாரக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கடந்த ஜூலை 10ஆம் திகதி முதல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றின் கட்டளையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவர் சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தனித் தனியே பிணை விண்ணப்பங்களை முன்வைத்தார். அவற்றின் மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இருவரும் தலா 25 ஆயிரம் ரூபா பணத்தை பருத்தித்துறை நீதிவான் மன்றில் வைப்பிலிடவேண்டும். ஒவ்வொரு சந்தேகநபர் சார்பிலும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளத்தக்க 2 இலட்சம் ரூபா பெறுமதியான இருவர், ஆள்பிணை நிற்கவேண்டும். சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல முடியாது.
அத்துடன், 3 மாதங்களுக்கு ஒரு முறை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்கள் கையொப்பமிடவேண்டும்” என்ற நிபந்தனைகளுடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.