தீர்வைப் பெற தமிழ் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

daklas-tellippali-hospital

தெல்லிப்பழையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார்.

‘இன்றைய நிகழ்வானது யாழ். மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது வடமாகாண மக்களுக்கும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பயனுள்ளதாக அமையப் பெற்றுள்ளது. இவ்வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளானது நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக அமையப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் புற்று நோய்க்கான உரிய சிகிச்சையினை பெற்றுக் கொள்வதற்காக எமது மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் இந்த வைத்தியசாலையினை உருவாக்கிய சிவகணநாதன் மற்றும் சரிந்த உனப்புவ ஆகிய இருவருக்கும் எமது மக்களின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றுள்ள சூழலில் அரசியற் தீர்விற்கான களமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறந்து விட்டுள்ளார். அதுவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும் .

கடந்த காலங்களில் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது ஒர் அர்த்தபூர்வமானதாகும் என்பதுடன், இதன் கால எல்லை ஆறுமாதங்கள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் பங்குபற்றாது இருக்கின்றமையானது பெரும் குறைபாடும் பின்னடைவுமாகும் என்பது மட்டுமல்லாது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதில் விருப்பம் காட்டவும் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் இணைந்து கொண்டு கருத்துக்களை முன்வைப்பதன் ஊடாக மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை ஜனாதிபதி முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் யாவும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இன்று மாகாணசபை கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

அரசின் பிரதிநிதியாக மட்டுமல்லாது மக்களின் பிரதிநிதியாகவும் நான் இருக்கிறேன். எனவே, கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

Related Posts