தீர்வு குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காவிடின் கட்சியிலிருந்து விலகவும் தயங்கமாட்டேன்: பாலச்சந்திரன்

UNPதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கத் தவறின் எமது மக்களுக்காக அக்கட்சியிலிருந்து வெளியேறவும் பின் நிற்கமாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் கணேசப்பிள்ளை பாலச்சந்திரன் (பாலா) தெரிவித்துள்ளார்.

அண்மையில் மூளாய் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘நான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவன் அல்ல. 1977ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்ப துயரங்களை சந்தித்திருக்கின்றனர். அத்துடன் எத்தனையோ மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. கணக்கிலடங்காத பொருளாதாரம் அழிக்கப்பட்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் அறிவேன்.

எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக, நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக தேசியத்திற்குள்ளே தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுப்பேன். எத்தகைய இடர் வந்தாலும் எம்மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயும் மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தும் மாகாண சபையில் துணிந்து குரல் கொடுப்பேன்.

1987 இல் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபையை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினூடாக அமுல்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியே. ஆனால் இன்று வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கின்றது. 13ஆவது திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிப்பதற்கும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது ஐக்கிய தேசியக் கட்சியே. துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றத்தினூடாக எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. எமது மக்களுக்கு நல்லதோர் அரசியல் தீர்வை சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் அது ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே முடியும்.

மீண்டும் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட முதற்படியாக மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து நம்மை பலப்படுத்துங்கள். ஐக்கிய தேசியக் கட்சியில் வடமாகாண சபைக்கு யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் 19 பேரும் தமிழ் பேசும் மக்கள்தான் உங்கள் உறவினர்கள் நண்பர்கள்தான். உண்மைகள் கசப்பானது. ஆனால் அதுவே உண்மை. இதை உணர்ந்து கொண்டு உணர்வோடு வாக்களியுங்கள்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் காரைநகர் பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றியீட்டி எமது பிரதேச மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன். அதேவேளை, வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டால் காரைநகர் மக்களுக்கு மட்டுமல்லாது, யாழ். மாவட்டமெங்கும் பரந்து வாழும் எம் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்வேன் என உறுதியளிக்கின்றேன்’ என்றார்.

Related Posts