தீர்வு கிடைக்கும் என்று நம்பியே இந்த ஆட்சியைக் கொண்டு வந்தோம்: மாவை

நாம் இந்த ஆட்சியை கொண்டு வந்த பொழுது எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றே நம்பியிருந்தோம் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களைத்தான் தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். அதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இராணுவத்தினர் இழைத்த பல குற்றங்களுக்கு பதில் சொல்லுவதற்கு தயக்கம் காட்டினாலும், ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தக் கூடிய ஒரு அலுவலகத்தை அமைக்கும் சட்ட மூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

ஆனாலும் இந்த அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விசாரணை நடத்தி நீதியை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த அலுவலகம் திறக்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

Related Posts