தீர்வுத்திட்டத்துக்கு ஒத்துழைக்கவும்; ரமபோசவிடம் முதலமைச்சர் சி.வி.

இந்தியா எமது இனப் பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு மேற்குலக நாடுகள் மற்றும் ஜெனீவா ஆகியன ஆதரவு வழங்கிவருகின்றன. நீங்களும் அதற்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்’ என தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோசவிடம் கேட்டுக்கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

cm sa meet

இதற்கு பதிலளித்த சிறில் ரமபோச,

‘தென்னாபிரிக்காவும் பல இனங்களையும் மதங்களையும் கொண்ட நாடு. அங்கு நீண்டகாலமாக நிலவிய இனப் பிரச்சினைகளை தாம் தற்போது தீர்த்துள்ளதாகவும் தமது நாட்டில் சுமூகமான நிலையை தோற்றுவித்தது போன்று, இலங்கையிலும் தம்மால் முயற்சி செய்து பிரச்சினைகளை தீர்க்க முயல்வதாகவும் கூறினார்.

இது தொடர்பில் மற்றைய நாடுகளுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக சிறில் ரமபோச உறுதியளித்துள்ளார்’ என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு செவ்வாய்க்கிழமை (08) விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களை யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

‘வடக்கில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்திட்டங்கள் உள்ளிட்டவை இராணுவத்தினருக்கும் தென்னிலங்கை வியாபாரிகளுக்குமாக மேற்கொள்ளப்பட்டவையே தவிர, எமது வடமாகாண மக்களுக்காக மேற்கொள்ளப்படவில்லை.

எமது மக்களுக்காக இவற்றை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்தால், வடமாகாணசபைத் தேர்தலில் நாங்கள் 30 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருக்க முடியாது என அவரிடம் நான் எடுத்துக்கூறினேன்.

மேலும், வடமாகாணசபையை இயங்கவிடாமல் முட்டுக்கட்டைகளாக பல விடயங்கள் இருக்கின்றமை பெரும் பிரச்சினையாகவுள்ளதாகவும் கூறினேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் வடமாகாணசபையால் எந்தவொரு அதிகாரத்தையும் எடுக்கமுடியாதுள்ளதாக நான் கூறினேன். அத்துடன், வடமாகாணசபையில் இரண்டு விதமான நிர்வாக அமைப்பு காணப்படுகின்றது எனக் கூறினேன். உதாரணத்திற்கு வடமாகாணச் செயலாளர் எனது பரிசீலனை இல்லாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினேன்.

இதன்போது ரமபோச, வேறு மாகாணசபையிலும் இது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றனவா எனக் கேட்டார். இல்லை வடமாகாணத்தில் மட்டும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளதெனச் சுட்டிக்காட்டினேன்.

மேலும், நான் நீதியரசராக இருந்தபோது இருந்த சட்டத்துக்கும் தற்போதுள்ள சட்டத்துக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. தற்போது நீதியரசரினைத் தெரிவு செய்வது ஜனாதிபதியின் கையில் உள்ளது. இதனால் நீதிமன்றத்தினூடாக எவ்வித நடவடிக்கைகளையும் எங்களால் மேற்கொள்ள முடியாதுள்ளதுடன், நீதிமன்றத்தினூடாக சாதகமான தீர்வைப் பெறமுடிவதில்லை என எடுத்துக்கூறினேன்’ என்றார்.

இந்தச் சந்திப்பில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts