தீர்வுடன் மீண்டும் சந்திப்பேன்: முள்ளிக்குளம் மக்களிடம் வட. மாகாண ஆளுநர் உறுதி

முள்ளிக்குளம் மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து, விரைவில் சிறந்த தீர்வுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன் என வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட வட. மாகாண ஆளுநர், அங்கு மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் விஜயத்தின் போது, தமது பூர்வீக நிலம் விடுவிப்பு குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த முள்ளிக்குளம் மக்கள், தமக்கு எவ்வித உதவிகளும் வேண்டாம் எனவும், தமது பூர்வீக நிலங்களை விட்டு கடற்படையினரை வெளியேற்றி தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதேவேளை, தமது நிலம் விடுவிக்கப்படும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியுடன் தெரிவித்த மக்கள், இப்பிரச்சினையை தீர்க்க ஆளுநர் துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வடமாகாண ஆளுநர், ‘முள்ளிக்குளம் மக்களின் நியாயமான இந்த நில மீட்பு போராட்டத்திற்கு மதிப்பளிக்கின்றேன்.

அதன்படி இப்பிரச்சினை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து முழுமையான விபரங்களை சமர்ப்பித்து நல்லதொரு முடிவை பெற்றுக்கொண்டு சில தினங்களில் மீண்டும் முள்ளிக்குளம் வந்து உங்களை சந்திக்கின்றேன்’ என உறுதியளித்தார்.

வடமாகாண ஆளுனரின் முள்ளிக்குளம் விஜயத்தின்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, வன்னி மாவட்ட கிறிஸ்தவமத இணைப்பாளர் பாஸ்டர் சந்துரு, அருட்தந்தையர்கள், உட்பட வடமாகாண ஆளுனரின் இணைப்பாளர், செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts