தீர்வின்றி 17ஆவது நாளாக தொடர்கின்றது ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 17ஆவது தொடர்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 2012ஆம் ஆண்டு மாதிரி கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் கடந்த எட்டு வருடங்களாக தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை விமானப்படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியதை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை எனவும், எனினும் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

Related Posts