யாழ்.புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண் இரவு வேளைகளில் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து வந்த நிலையில் மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டு உள்ளார்.
அது தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில் ,
“கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் , சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை மற்றும் பணம் திருடபட்ட சம்பவம் , வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பு உள்ளது.
இந்தப் பெண் வயோதிபர்கள் வாழும் வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்யவதற்கு என வேலைக்கு சேர்ந்து கொள்வார். அங்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு வீட்டில் பணம் , நகை என்பவற்றை வைக்கும் இடங்களை கண்காணித்து அது தொடர்பில் தன்னுடன் தொடர்பில் உள்ள திருடர்கள் , கொள்ளையர்களுக்கு தகவல்கள் வழங்குவார்.
குறித்த பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் திருடர்கள் கொள்ளையர்கள் அந்த வீடுகளில் இறங்கி திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். பின்னர் தாம் திருடிய மற்றும் கொள்ளையடித்த நகை பணத்தில் தகவல் தந்த குறித்த பெண்ணுக்கு பங்கு கொடுப்பார்கள்.
அந்நிலையில் இந்தப் பெண் தொடர்பில் எமக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் பெண்ணை கைது செய்தோம். கைது செய்த பெண்ணிடம் இருந்து 2 தங்க சங்கிலிகள் , மற்றும் மோதிரம் ஒன்று என்பன மீட்கப்பட்டு உள்ளன.” என தெரிவித்துள்ளனர்.