தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலானோர் அல்ஹகோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை அதிகம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளவர்கள், பட்டாசு, மத்தாப்பு போன்ற பல்வேறு விதமான வெடி வகைகளை பயன்படுத்தும் சந்தர்ப்பம் உள்ளமையினால் தீபற்றக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
இவ்வாறு தீபற்றக்கூடிய அபாயத்தை குறைப்பதற்காகவே அல்ஹபோல் அடங்கிய கை கழுவும் திரவத்தை கை உலர்த்தும் வரை தேய்ப்பதற்கு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் போன்ற சுகாதார அமைப்புகளுக்கு, பக்டீரியாவைக் கொல்ல உகந்த அல்ஹகோல் செறிவு 70 வீதம் முதல் 95 வீதமாகுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்க நோய்த்தடுப்பு, பாதுகாப்பு நிலையம் மற்றும் இலங்கை நுண்ணுயிரியல் கல்லூரி என்பன கை கழுவ பயன்படுத்தும் திரவம், 60- 70 வீதம் அல்லது அதற்கு அதிகபடியான எதனோலை கொண்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டிருக்கின்றன. இத்தகைய திரவங்கள் இலகுவில் தீபற்றக்கூடியதாகும்.
ஆகவேதான்,உடனே தீப்பற்றக்கூடிய சிறிதளவு அல்ஹகோல் அடங்கிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு ஒளி விளக்குகளை ஒளிரச்செய்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.