ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் திறந்துவிடப்பட்ட பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியை, ராணுவம் மீண்டும் மூடியுள்ளது. நேற்று முன்தினம் காலை இவ்வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றய தினம் (புதன்கிழமை) அங்கு மக்களை ராணுவம் அனுமதிக்கவில்லையென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 28 வருட காலமாக குறித்த வீதி ராணுவத்த்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வீதியை திறந்துவிடுமாறு பணித்தார். அதன் பிரகாரம் இவ்வீதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டதோடு, மக்கள் மகிழ்ச்சியுடன் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை அங்கு சென்ற மக்களை ராணுவம் திருப்பியனுப்பியதோடு போக்குவரத்தை இடைநிறுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பொன்னாலையின் சில பகுதிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், குறித்த வீதியை ராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், அருகிலுள்ள இடங்களுக்கும் பல கிலோமீற்றர் தூரம் கடந்து வேறு வழிகளில் செல்லும் துர்ப்பாக்கிய நிலையை இம்மக்கள் எதிர்கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜனாதிபதி குறித்த வீதியை திறக்குமாறு பணித்திருந்தார்.
எனினும், திறந்த ஒரே நாளில் இவ்வீதியை ராணுவம் மூடியுள்ளமை வேதனையும் விசனமும் அடையச் செய்துள்ளதென குறிப்பிடும் மக்கள், ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறும் கண்துடைப்புக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிடுகின்றனர்.