‘கபாலி’ படத்திற்கு பிறகு தன்ஷிகா நடித்து வரும் புதிய படம் ‘எங்க அம்மா ராணி’. இப்படத்தை பாணி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் சமுத்திரகனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படம் வருகிற மே 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து இளையராஜா கூறும்போது, இன்று இருக்கும் திரையுலகம் எங்கெங்கோ போய்கொண்டிருக்கிறது. அது சரியான தடத்தில் செல்கிறதா இல்லை தடம்மாறி செல்கிறதா என்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும், படம் எடுப்பவர்களுக்குமே சரியாக தெரிவதில்லை. உதாரணத்திற்கு சிறு விஷயம் சினிமாவில் சிஜி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதற்கான ரிசல்ட் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியுமா? அப்படி இருக்கையில் அதற்கென்று தனி பட்ஜெட் எதற்கு.
இன்று இருக்கும் சினிமா உலகில் ஒரு சாதரண எதார்த்தமான கதையை எமோஷனலாக சொல்லும் தன்மை சினிமாவில் குறைந்து கொண்டே இருக்கிறது. கோயில்களும், கலாச்சாரங்களும் எதற்காக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் மக்களுக்கு நல்ல விஷயங்களை தொடர்ந்து நியாபகப்படுத்தவில்லை என்றால் அது வழக்கொழிந்து போய்விடும். முன்னோர்கள் இதை நமக்கு செய்தது எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் ரத்ததில் கலந்து நிற்க வேண்டும் என்பதற்காக.
சினிமாவை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்றாலும் அதற்கான ஒரு கதையம்சம் நல்ல விஷயங்களை நல்ல விதமாக சொல்லும் முற்றிலும் மாறுபட்டு தனித்துவ தன்மையும் கொண்டிருக்க வேண்டும், அந்த வகையில் இந்த படம் சற்று மாறுபட்டு இருந்ததால் இப்படத்திற்கு இசையமைத்தேன்.
நான் வேலை செய்யும் படங்கள் பற்றி எப்போதும் சொல்வதில்லை. ஜனங்கள் போய் பார்த்து விட்டு, அவர்கள் தான் இது நல்ல படம் என்று முடிவை சொல்ல வேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்காக எது வேண்டுமானாலும் செய்வாள். குழந்தை மீதான தாயின் அக்கறை 200 சதவீதம் இருக்கும். இப்படத்தில் தன் குழந்தைக்காக அந்த தாய் யாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்கிறாள். அதுதான் மத்த படத்திற்கும் இதற்குமான வித்தியாசம்
இதில், அம்மாவை பற்றிய பாடல் போட்டுள்ளேன் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அம்மாவென்று ஒருத்தி இல்லையென்ற ஒரு எண்ணமே உலகில் எவருக்கும் வந்ததில்லை. ‘வா வா மகளே’ பாடல் படத்தின் ப்ரோமாவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் பாணி அறிமுக இயக்குனர் இல்லை, அவர் எத்தனையோ இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். சமுத்திரகனியின் உதவியாளராக இருந்த போதும், மலேசியாவில் நிறைய இயக்குனர்களை உருவாக்கிய உற்சாகமான இளைஞர் அவர். இயக்கம் எனபது ஒரு தலைமை நிர்வாகம் மாதிரி. அதை சரியாக சொல்லிக் கொடுத்து இத்தனை பேரை உருவாக்கியவர் இப்போது படம் எடுக்கிறார் என்றால் கட்டாயம் எதிர்ப்பார்க்கலாம்.
படத்தின் பின்னணி இசை ஒவ்வொரு ரீலுக்கும் வித்தியாசமாக அமைந்தது. பொதுவாக ஒரு தீம் கிடைத்தது என்றால் இசையமைப்பாளர்கள் அதை மேம்படுத்தி கொண்டே செல்வோம். ஆனால் இந்த படத்தில் காட்சிகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தால் பின்னணி இசையும் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அது ஒரு நல்ல டெஸ்டிங்காக இண்டிரெஸ்டாக இருந்தது. நிச்சயமாக இப்படத்தை எதிர்பார்த்து போகலாம். உங்கள் வாழ்த்துகளை தான் இப்படத்தின் குழு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது என்பதை குழுவின் சார்பாக நான் சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.