விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள சிவாஜியின் ‘அன்னை இல்லத்தில்’ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.
இந்த விழாவில் நடிகர்கள் விவேக், விஷால், பிரபு, சத்யராஜ், தனுஷ், ராகவா லாரன்ஸ், கார்த்தி, விஜய்யின் மனைவி சங்கீதா, நிக்கி கல்ராணி, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும்போது,
ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும். படம் வெளியான அன்றே விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்தவேண்டும். அதேபோல், விமர்சனம் பண்ணும்போதும் யாரையும் காயப்படுத்தாதீர்கள்.
தயாரிப்பாளர்களும் சினிமாவில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்தே படத்தை எடுக்க முன்வர வேண்டும். தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து படம் எடுக்கக்கூடாது. அதேபோல், முன்அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று படங்களை விற்பனை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.