குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது, பாரத தேசத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த காந்திக்கே சிறையா, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை விடுதலை செய், ஈழத்தமிழர்களின் ஆதரவாளனை விடுதலை செய். நினைவேந்தல் நிகழ்வு தமிழர்களின் உரிமை, தமிழக அரசே நசுக்காதே! நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா? போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியிருந்தார்கள்.
இந்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.