திருகோணமலையில் விமானப்பராமரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அனுமதி சீனாவுக்கு வழங்கப்படுமானால் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறுவதும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்அமைந்து விடும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியா – இலங்கை ஆசிய நாடுகளினது ஒருமைப்பாடு ஐக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கலாகாது என 1989இல் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் போது ஏற்படுத்தப்பட்டு இணங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் திருகோணமலையில் சீனத்திட்டத்திற்கு அனுமதியளிக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் பிற்பகல் 1.00மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் 23 (2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய போதே எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
திருகோணமலையில் ஐந்து பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான (40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கென சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி ஏற்றுமதி கூட்டுத்தாபனம் எனும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக ஜூலை மாதம் 06ஆம் திகதி வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இலங்கை விமானப்படையிடம் இருக்கும் சீனாவின் தயாரிப்பிலான விமானங்கள் அனைத்தும் மேற்படி உத்தேச பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி பத்திரிகையில் இவ்வாறானதொரு செய்தி வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் அரசாங்கம் இது தொடர்பில் எந்த கருத்தினையும் தெரிவித்திருக்கவில்லை.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தனது இந்திய விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை டில்லியில் சந்தித்த போது இவ்விவகாரம் கவனத்திற் கொள்ளப்பட்டிருந்ததாகவும் இது குறித்து பேசப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இலங்கை – இந்தியா ஆகிய நாடுகளினது ஐக்கியம் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளுக்கு இருநாடுகளும் தத்தமது நகரப்பிரதேசங்களில் அனுமதி வழங்குவதில்லை என்ற ரீதியில் 1987இல் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
அது மாத்திரமன்றி இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திருகோணமலையை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்ற விடயமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்த அரசாங்கங்கள் உறுதி செய்து வந்துள்ளன.
மேற்படி சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றியும் மேற்படி உடன்படிக்கை ஏற்படுத்தப்படுவதற்கு முன்னதாக இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?
இரு நாடுகளினது வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது மேற்படி திருகோணமலை விமான பராமரிப்பு நிலைய விவகாரம் தொடர்பில் பேசப்பட்டதா? என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.