திருமணப்பதிவு வரியிலிருந்து விலக்களிக்கவும்: ஆதிவாசிகளின் தலைவர்

திருமணப்பதிவிற்கென புதிதாக அறவிடப்படும் வரி அறவீட்டுக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலேத்தோ அந்த வரியை ஆதிவாசிகளிடம் அறவிடக்கூடாது எனவும் கோரியுள்ளார்.பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சகல வரிகளில் இருந்தும் ஆதிவாசிகள் விலக்களிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரியையும் தங்களிடமிருந்து அறவிடக்கூடாது என்றும் கோரியுள்ளார்.

திருமணப்பதிவிற்கான வரி அறவீட்டிலிருந்து தங்களை விலக்களிக்கவேண்டும். இன்றேல் அந்த வரியை குறைக்கவேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுடைய திருமணம் உறவுகளுக்குகிடையில் நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் திருமணப்பதிவுகள் நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் திருமணப்பதிவு என்பது முக்கியமானதாகும். ஒருவர் திருமணப்பதிவை செய்துக்கொள்ளவில்லையாயின் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

தங்களுடைய பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே தற்போது திருமணப்பதிவுகள் செய்துக்கொள்ளப்படுகின்றன.

நடைமுறையிலுள்ள திருமணப்பதிவு சட்டத்தின் பிரகாரம் 5,000 ரூபா அறவிடப்படுகின்றது. அந்த தொகையானது தங்களுடைய ஒருமாத செலவிற்கு போதுமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கட்டணமானது வசதி படைத்தவர்களுக்கே பொருத்தமானதாகும். அன்றாடம் காட்டுக்கு சென்று வேட்டையாடி விவசாயம் செய்து வாழ்பவர்களுக்கு பொருத்தமானதாக அமையாது.

56 வேடுவர் கிராமங்கள் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் அரசாங்க ஊழியர்கள் இன்றியே வாழ்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts