திருமணத்திற்கு முன் ”கல்யாண யோகா”

பல இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்கவும், தங்களது மனம் மற்றும் உடலைச் சரிசெய்து கொள்ள செல்லும் இடமாக தமிழக அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாறியுள்ளது.

yoga_teacher

உடல் எடையைக் குறைக்க பல விதமான மருந்துகள், ஜிம் போன்ற பயிற்சிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத நிலையில் அவர்களின் இறுதி வாய்ப்பாக இந்த இடம் இருப்பதாக அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளம் வயதினருக்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும், திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்க சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்காக பிரத்தியேகமாக ‘கல்யாண யோகா’ என்ற பெயரில் இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது என இங்குள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கும் பயிற்சி வகுப்பில் சிகிச்சை மேற்கொள்ள வந்திருந்த இளம் பெண்களில் ஒருவர் காயத்ரி(25). தனது திருமணத்திற்காக, 15 நாட்கள் அரசு யோகா மருத்துவமனையின் சிகிச்சை பிரிவில் தங்கி தனது உடல் எடையைக் குறைத்ததாக கூறுகிறார்.

”எனது கை மற்றும் கால் பகுதிகளில் அதிக சதை இருப்பதையும், எனக்கு பிடித்தமான வகையில் உடை உடுத்திக் கொள்வதில் பிரச்சனை இருப்பதை உணர்ந்தேன். திருமணத்திற்குத் தயாராகும் வேளையில், உடல் எடையை கட்டாயம் குறைக்க வேண்டும் என எண்ணினேன். சிகிச்சையின் போது, தனுர் ஆசனம் மற்றும் சக்தி பந்தாசனம் என்ற ஆசனங்களில் அதிக கவனம் செலுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்,”என்றார் .

சக்தி பந்தாசனம் என்பது மரம் வெட்டுவது, கல்லில் மாவு அரைப்பது மற்றும் கப்பல் ஓட்டுவது போன்ற அசைவுகளைக் கொண்டது என்ற காயத்ரி,” எனது எடை 62 ல் இருந்து 55 கிலோவாக எடையைக் குறைக்க முடிந்தது. சிகிச்சை முடிந்த பின்னும் நான் வீட்டிலும் பயிற்சியை தொடருவேன், ”என்றார்.

அதிக உடல் எடையால் தடைபட்ட திருமணம்

உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் இரண்டு முறை தனது திருமணத்திற்குத் தடை ஏற்பட்டதை அடுத்து கோமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மன உளைச்சலுடன் இருந்தார். ”65 கிலோ எடையுடன் இருந்த எனக்கு என்னை கண்ணாடியில் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. 15 நாட்கள் இங்கு பயிற்சி, சிகிச்சையை தொடர்ந்து, வீட்டிலும் பயிற்சி என ஒரு மாதம்,15 நாட்களில் 10 கிலோ வரை குறைத்தேன். தற்போது எனது எடை 54, ” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவர்.

உடல் எடையைக் குறைக்க ஆசனங்கள் மட்டுமின்றி உணவு எடுத்துக் கொள்ளும் விதமும் மிக முக்கியம் என்கிறார் அரசு யோகா மருத்துவர் தீபா சரவணன். ”இங்கு 15 நாட்கள் தங்கும் போது, அவர்களின் உணவு பழக்கத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை உணர்த்துகிறோம். சுவையான, சமைக்காத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறோம்,”’ என்றார்.

இரண்டு வாரங்களில் திடீரென உடை எடை ஏழு கிலோ வரை குறைவது உடலைப் பாதிக்காதா என்று கேட்டபோது, ”உடல் நலம் குன்றிய ஒருவரின் உடல் எடை குறையும் போது தான் பிரச்சனை. அல்லது எந்த விதமான உடற்பயிற்சியும் மேற்கொள்ளாத ஒருவரின் உடல் எடை திடீரென குறைந்தால் அது நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால், இயற்கை உணவு, தேவையான ஆசனங்கள் கண்டிப்பாக உடல் எடையைக் குறைக்கவும், அதனால் பாதிப்பு ஏற்படலாமல் இருக்கவும் உதவும்,” என்றார்.

60 கிலோ எடையுடன் இருந்த ஜோய்சி தனது நிச்சயதார்த்தம் முடிந்த பின், ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டார். ” எனக்கு ஜிம் பயிற்சிகளை செய்த போது, அதிக உடல் வலி ஏற்பட்டது. இயற்கை யோகா மருத்துவமனை சிகிச்சையை கடைசி முயற்சியாகத்தான் செய்தேன். ஆனால் பத்து நாட்களில் ஐந்து கிலோ எடை குறைந்த போது, எனக்கு நம்பிக்கை வந்தது. எனது திருமணத்திற்கு எனக்கு விருப்பமான உடைகளை நான் அணிவேன் என்ற மகிழ்ச்சியை நான் அடைந்தேன்,” என்றார்.

உணவே மருந்து

சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மாத்திரைகளுக்குப் பதிலாக, பழங்கள் எடுத்துக்கொள்ளவும், நடைப் பயிற்சி செய்யவும், உடலில் பிரச்சனை உள்ள பகுதியை அறிந்து கொள்ள அக்குபங்சர் நடைபாதையில் நடக்குமாறு மருத்துவர்கள் குறிப்பு சீட்டில் எழுதுகின்றனர்.

ஒரு நாளில் இந்த மருத்துவமனைக்கு வரும் 250 நபர்களில் குறைந்த பட்சம் 80 நபர்கள் வரை அதிக எடை மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளவர்களுக்கு, பழங்கள், காய்கறிகள் சாலட், ஜூஸ் போன்றவற்றைத் தயாரிக்கும் வேலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

”மற்ற அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சேவை போலவே எங்களது மருத்துவமனையிலும் உணவு இலவசமாக அளிக்கப்படுகிறது. மாத்திரைகளுக்குப் பதிலாக, மனதை வலுப்படுத்தும் பயிற்சியை நாங்கள் வழங்குகிறோம். மருத்துவத்திற்குச் செலவு செய்யாமல், மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல், தங்களது உடலைச் சீரமைக்க மக்களுக்கு உதவும் மருத்துவ முறையைத் தான் இங்கு வழங்குகிறோம்,” என்றார் அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் மணவாளன்.

Related Posts