திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகளின் பணப் பைகள் தொடர்ந்து திருட்டுப் போகும் சம்பவங்களினால் வியாபாரிகள் தமது வியாபாரத்தைப் பார்ப்பதா அன்றி தமது பணப்பைகளை பாதுகாப்பதா என்று தெரியாது பெரும் திண்டாட்டமான நிலமையில் காணப்படுகின்றார்கள்.
கடந்த மூன்று மாத காலத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளின் பணப்பைகள் யாருக்கும் தெரியாத வகையில் மிகவும் நுட்பமாக திருடப்பட்டுள்ளன.
கடந்தவாரம் சந்தையில் வியாபாரம் செய்யும் ஒருவரின் பணப்பை மூவாயிரத்தி ஐநூறு ரூபா பணத்துடன் திருடப்பட்டதுடன் மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் மற்றுமொரு வியாபாரியின் பணப்பை பதினையாயிரம் ரூபா பணத்துடன் திருடப்பட்டுள்ளது.
இத்தகைய திருட்டு சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கின்றபோதிலும் பொலிஸ் நிலையம் சென்று முறையிடுவதில் வியாபாரிகள் காட்டும் அக்கறையின்மை திருடர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்து வருகின்றமையும் குறிப்பிடக் கூடியதாகும்.
பொலிஸ் நிலையம் சென்றால் பொலிஸாரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும் மற்றும் கால தாமதம் ஏற்படும் எனக் கூறி வியாபாரிகள் பின்னடிப்பதாகவும் சந்தையில் வியாபாரம் செய்யும் சிலர் தெரிவித்தனர்.