வாள்களுடன் ஆட்டோக்களில் வந்த நபர்கள் இளம் குடும்பஸ்தர் ஒருவரைச் சினிமாப் படப் பாணியில் பலர் முன்னிலையில் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்து விட்டு மறைந்தனர்.இதன் போது மேலும் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடாநாட்டை பரபரப்பில் ஆழ்த்திய இந்தச்சம் பவம் திருநெல்வேலி சிவன் அம்மன் கோயிலுக்கு முன்னால் நேற்றுப் பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த நாதன் ஜென்சிலின் (வயது26) என்பவரே தலையில் கடுமையான வாள் வெட்டுக்கு இலக்காகி, மூளை வெளியேறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இரத்தினசிங்கம் விமலதாசன் (வயது 27) மற்றும் நல்லூர் தலங்ககாவில் பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஜசிந்தன் (வயது 27) ஆகிய இருவரும் படுகாய மடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விமலதாசன் கூறும்போது,
“உயிரிழந்த ஜென்சிலின் ஒரு பிள்ளையின் தந்தை. அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. நானும் ஜென்சிலினும் மாரியம்மன் வீதியில் உள்ள வயல் கரையோரத்தில் நேற்று மாலை வழமை போன்று உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென அந்த இடத்துக்கு மூன்று ஆட்டோக்களில் வாள்கள் மற்றும் கொட்டன்களுடன் வந்த சிலர் எம்மைப் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
எனக்கு தலையில் வாள்வெட்டொன்று விழுந்தது. பின்னர் இடுப்பு, கை, போன்ற பகுதிகளில் கொட்டன்களாலும் தாக்கினர். பலமான வெட்டுக்காயம் காரணமாக என்னால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அந்த இடத்திலேயேகிடந்தேன். பின்னர் சற்றுநேரத்தில் அயலவர்களும், உறவினர்களும் வந்தே என்னை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அப்போதுதான் ஜென்சிலின் பேச்சுமூச்சின்றிக் குப்புறக் கிடப்பதையும், அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கூடாக மூளைப்பகுதி வெளியேறி இருந்ததையும் கண்டேன்.” என்றார்.
“சம்பவம் தொடர்பில் நேற்று இரவு வரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனினும் இதுதொடர்பாக தீவிரமான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்னிரவுவரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவரின் சடலம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.