திருச்சி ஈழத் தமிழர் சிறப்பு முகாம் முற்றுகை! ஆயிரக்கணக்கானோர் கைது!!

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் மத்திய சிறையை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட 1,252 பேர் கைது செய்யப்பட்டனர்.

india-velmurugan

தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலை முன் திரண்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வை. காவேரி, மே.ப. காமராஜ், 36 பெண்கள் உள்பட 1,252 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் திருச்சி – புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அங்கிருந்து ஏரளமான ஈழ தமிழர்கள், தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர். அதில் சிலர் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக கூறி, கைது செய்யப்பட்டு, தமிழக சிறைகளிலுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களில் உள்ள ஈழ தமிழர்களை உடனே விடுதலை செய்து, அவர்கள் விரும்பு நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்றார்.

கெட்டவார்த்தையில் திட்டிய அதிகாரி

இந்த போராட்டத்தின் போது காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர்,முன்னாள் எம்.எல்.ஏ.வை.காவேரியை பார்த்து ஹிந்தியில் மொழியில் கெட்டவார்த்தையில் திட்டினார். இதனால் வாழ்வுரிமை கட்சியினருக்கும், துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூருக்கும் இடையே பயங்கர வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து உதவி ஆணையர் அருள்அமரன் அவர்களை சமதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts