திருச்சியில் இலங்கையர் நால்வர் நிபந்தனையின்பேரில் விடுவிப்பு

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்த நான்கு பேர் நிபந்தனையின் பேரில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக இலங்கைத் தமிழர்கள் 14 பேர் கடந்த சில ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித வழக்கு விசாரணையும் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், தங்களை விடுவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் சிறை வளாகத்தில் மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து உள்துறை செயலாளர்கள், கியூ பிரிவு பொலிஸார், சிறைத்துறை அதிகாரிகள், அகதிகள் முகாம் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி அதில் எந்தெந்த கைதிகளை விடுவிப்பது என முடிவெடுக்கப்பட்டு சனிக்கிழமை அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அந்தவகையில் முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் சிவனேஸ்வரன், மகேஸ்வரன், சந்திரகுமார், சுரேஷ்குமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்கவும், குமரகுரு என்ற நபரை செய்யாறு அகதிகள் முகாமுக்கும் மாற்றியும் ஆணை பிறப்பிக்கப்பட்டது என தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து சுரேஷ்குமார் தவிர மற்ற மூவரும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

சுரேஷ்குமாருக்கு ஏற்கனவே ஒரு விபத்தில் அடிபட்டு கால் எலும்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் தனியாக செல்ல முடியாது. எனவே உறவினர்கள் யாரும் அழைத்துச்செல்ல வராததால் அவரை விடுவிக்க முடிவில்லை. உறவினர்கள் வந்ததும் அவர் அனுப்பி வைக்கப்படுவார்.

விடுவிக்கப்பட்ட அனைவரது பாஸ்போர்ட்டுகளையும் முடக்கி வைக்கவும், அவர்கள் மீது உள்ள வழக்கு விசாரணைகளுக்கு பின் வரும் தீர்ப்பை பொறுத்துத்தான் பாஸ்போர்ட் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அதுவரையில் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts