திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை மக்கள் மீள்குடியேற வேண்டாம் என்று புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அந்த மக்களை குடியேறவேண்டாம் என்று பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். தமது பூர்வீக காணிகளே அவை என்று மக்கள் தெரிவித்தபோதும், குறித்த காணிகள் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துக்குரியவை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து புதைபொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை குறித்த இடத்துக்கு வந்து பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் 25ஆம் திகதிவரை அப்பகுதியில் குடியேற்றம் தொடர்பான வேலைகளை நிறுத்திவைக்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மக்கள் மார்ச் 25ஆம் திகதி வரை காத்திருப்பதாக கூறியதுடன் 25ஆம் திகதி எமது காணிகளில் குடியேற அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
1960 ஆம் ஆண்டு இப்பகுதியில் குடியேறிய மக்கள் 1990ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.
யுத்தம் நிறைவுபெற்று 2010 ஆம் ஆண்டு அப்பகுதிக்கு மீள்குடியேற வந்தபோது, தொல்பொருள் வலயம் என தெரிவித்து தம்மை மீளக்குடியமர அனுமதிக்கவில்லை என்று குறித்த காணிகளுக்கரிய மக்கள் தெரிவிக்கின்றனர்.