திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி அமெரிக்க கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முக்கிய நகரங்களைக் கொடுத்துவிட்டு சிறீலங்கா வெளிநாடுகளின் கொலணியாக மாறியுள்ளது.
அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15 ஆயிரம் நிலம் வழங்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமையவே அக்காணிகள் சீன அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது.
சீன முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு 750 ஏக்கர் காணிகளை வழங்குவதற்கு மாத்திரமே, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இணங்கியது. அனால் பின்னர் அதனை விட அதிகமான நிலத்தை அவர்கள் கேட்டிருந்தனர்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கம் ஒருபோதும் திட்டமிட்டிருக்கவில்லை.
அம்பாந்தோட்டைக் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான முடிவு இதுவரை எட்டப்படவில்லையென ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். ஆனால் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்கள் வேறுவிதமாகக் கூறி வருகின்றனர்.
திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி அமெரிக்க இராணுவ முகாம்களை அமைக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. வடக்கில் இந்தியாவின் தலையீட்டுக்கும் ஊக்குவிக்கிறது.
இதன்மூலம் நாட்டை வெளிநாடுகளின் கொலனியாக மாற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.