திருகேதீஸ்வரம் அருகே விகாரை! கேள்விக்கு பதிலளிக்க இரு வார அவகாசம் கேட்கிறது புத்தசாசன அமைச்சு

மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு மிக அண்மையிலுள்ள தமிழருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுகின்றதா எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிப்பதற்கு இருவார கால அவகாசத்தை புத்தசாசன அமைச்சு கோரியுள்ளது.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போது, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதனே நீதி அமைச்சரிடம் மேற்படி வினாவைத் தொடுத்திருந்தார்.

“மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரம் கோவில் இந்து மக்களின் புனித வழிபாட்டுத் தலமாகும் என்பதையும், இந்தக் கோவிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கணபதிப்பிள்ளை விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுகின்றதா என்பதையும் அமைச்சர் அறிவாரா?

சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?” என்று சார்ள்ஸ் எம்.பியின் கேள்விகள் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு நீதி, புத்தசாசன அமைச்சு இருவார கால அவகாசத்தைக் கோரியுள்ளது.

Related Posts