தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் எழுச்சிபூர்வமாக இடம்பெறும்- மணிவண்ணன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக நினைவுகூருவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அவர் இனத்தின் அடையாளம் என்ற படியால், அவர் மக்களுக்கு சொந்தமானவர்.

ஆகவே நினைவேந்தல் நிகழ்வுகளை கட்சி மற்றும் அமைப்புகள் சாராமல், பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள குழுவே இம்முறை மேற்கோள்ளும்.

நினைவேந்தல் இடம் மாநகர சபை எல்லைக்குள் இருக்கிறது. ஆகவே அதற்கான வழிமுறைகளை மாநகர சபை என்ற ரீதியில் கூறுவது சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

நினைவு தினமன்று கவி அரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை நடத்துவதற்கு நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது. அதற்கு அமைவாக நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர சில தரப்புக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள விட மாட்டார்கள். குழப்புவார்கள். எனவே, இம்முறையும் குழப்பம் வரலாம். அதற்கான வேலைகளை அரசு தரப்பு மேற்கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் உள்ள அரசு வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசு குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளது.

இவற்றை எல்லாம் கடந்து எழுச்சியாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளுவோம்.- என்றார்.

Related Posts