தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்த போதும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அவர் முன்னெடுக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
நல்லூரில் தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுக்கு வசதியாக யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிக்கு வீதித் தடை போட்டமை மற்றும் பவுசர் ஊடாக வீதியை தண்ணீரால் நனைத்தமை தவிர்ந்த எந்தவொரு பணியையும் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் ஏற்பாடு செய்யவில்லை அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
“தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபை நடத்தும் என்று முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், நினைவேந்தல் வாரம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஆரம்பமாகிய பின்னரும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். அத்துடன், கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்விலும் இதற்கான அறிவித்தலை அவர் விடுத்திருந்தார்.
ஆனால் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்க முன்னரோ அல்லது நினைவேந்த வாரம் கடைப்பிடிக்கப்பட்ட போதோ நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி ஒழுங்கமைப்பு மற்றும் அதனை அண்டிய சூழலில் குப்பைகளை அகற்றுவதற்கோ யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.
அத்தனை ஏற்பாடுகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளையோர்களும் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களுமே முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் அறிவித்தவாறு செயற்படுவார் என்று நாம் பார்த்துக்கொண்டிருந்தால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டிருக்காது. அதற்காகவே தாம் ஏற்பாடு செய்வதாக முதல்வர் முந்திக்கொண்டு அறிவித்தாரா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் வார ஆரம்ப நாளில் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தார். அத்துடன், இன்றைய இறுதி நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்று அவர் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
எனவே நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்காமல் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், அவற்றை தாமே நடத்துவதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைப்பதற்கு சமமாகும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி சாடியுள்ளது.