தியாக தீபத்துக்கு சிலை – கிட்டு பூங்கா புனரமைப்பு – வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர் யாழ் மாநகர முதல் அமர்வில் வி.மணிவண்ணன் கோரிக்கை

தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு யாழ் மாநகரசபை சிலை வைத்தால் அதனை வரவேற்பதோடு அதற்கான ஒத்துளைப்பும் வழங்குவோம். அதேபோன்று மாவீரர்களின் பெயரில் முன்னர் இருந்த வீதிகளுக்கு மீண்டும் அவர்களது பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்றும் கிட்டு பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் கிட்டு பூங்க என பெயர் சூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணமாகியவர்களுக்கு சிலை வைக்கவேண்டும் என இங்கு சிலர் கோருவது தேவையற்ற ஒரு விடையம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு யாழ் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தனது முதலாவது உரையினை வழங்கியபோதே மணிவண்ணன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

அவரது உரையின் முழு வடிவம் வருமாறு,

எங்களுக்கு வழிகாட்டிகளாய் இருந்த எங்கள் மாவீரச் செல்வங்களை முதலில் மனதிலே நிறுத்தி எனது உரையைத் தொடர்கின்றேன்.

எமக்கு மக்களால் வழங்கப்பட்டுள்ள ஆணை என்பது எமக்கான கௌரவம் அல்ல. அது எமக்கு வழங்கப்பட்ட சேவையாகவே நாங்கள் கருதுகின்றோம். எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கடமையை நாங்கள் செவ்வனெ மேற்கொள்வோம். நாங்கள் ஒரு கட்சியிலிருந்து இந்த மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் எங்களுக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. இந்தப் பிரதேச மக்களுடைய அபிவிருத்தியை நாங்கள் மனதிலே நிறுத்தி செயற்பட வேண்டும். அந்தக் கடமைப்பாட்டை நாங்கள் எங்களுடைய மனதிலே முன்னிறுத்தி பணியாற்றவேண்டும்.

இங்கு சில உறுப்பினர்களால் சில விடையங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளன. பத்திரிகைகள் வாயிலாகவும் தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு சிலை அமைப்பது தொடர்பாக அறிந்திரந்தோம். எங்களுடைய கட்சியின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது. எமது முதலாவது செயற்பாடாக திலீபன் அண்ணாவிற்கு சிலை அமைப்பதனை முன்னெடுக்கவே நாங்கள் விரும்புகின்றோம்.

நல்லூரின் வடக்கு வீதியிலே தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவுக் கல் ஒன்று இருந்தது. அவ்விடத்திலேயே அவர் உண்ணாவிரதமிரந்தார். அந்த இடமும் புனரமைப்புச் செய்யப்படவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். அதேபோல பேரினவாதிகளால் அழிக்கப்பட்ட தியாகதீபம் திலீபன் அண்ணாவின் தூபியை அழிக்கப்பட்ட அடக்கு முறைக்கு நினைவுச்சின்னமாக வைத்துக்கொண்டு அதன் அருகில் புதிய தூபியை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

அதேபோல உங்கள் எல்லோருக்கும் தெரியும் முத்திரைச் சந்தியிலே கிட்டுபூங்கா என ஒரு பூங்கா இருந்தது. அதனுடைய பெயரை சங்கிலியன் பூங்கா என்று மாற்றிவிட்டார்கள். அதனை மீண்டும் கிட்டுபூங்காவாக மாற்றுவதற்கு நாங்கள் சபையில் முன்மொழிவுகளைச் செய்யவேண்டும்.இது சிதைவடைந்த ஒரு பற்றைக் காடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் கிட்டு பூங்காவாக நாங்கள் மீள நிர்மாணிக்க வேண்டும். 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் அது எவ்வாறு கிட்டுப் பூங்காவாக இருந்ததோ அவ்வாறு அது மாற்றியமைக்கப்படவேண்டும்.

விடுதலைப் போராட்டத்திலே பல்வேறு தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் விதமாக யாழ் மாநகரசபைப் பகுதிக்குள்ளே உள்ள வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்கள் முன்னர் சூட்டப்பட்டிருந்தன. சில வீதிகளுக்கு வேறு பெயர்கள் மாற்றப்பட்டுவிட்டன. அந்த வீரர்களைக் கௌரவிக்கும்வகையில் மீண்டும் அப் பெயர்கள் இடப்படவேண்டும்.

இந்த சபையிலே ஒரு மாற்றம் தெரிந்தது. எல்லோரும் தேசியம் பேசுகிற ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றார்கள். அந்த வகையில் முன்னர் இருந்தவாறு மாவீரர்களது பெயர்களை வீதிகளுக்கு சூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

இங்கு ஒரு விடையத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இங்கு நடைபெற்றது ஒரு விடுதலைக்கான போராட்டம். அடக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற மக்களுடைய விடுதலைக்காகவே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அந்த மக்களுடைய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும் இருக்கிறார்கள் நாம் யாருக்கு எதிராக போராடினோமோ. எங்களை அடக்க நினைத்த அந்த அரச இயந்திரத்தொடு இணைந்து எமக்கு எதிராக போராடிய போராளிகளும் இருக்கிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில் விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கு மாத்திரமே சிலைவைக்க வேண்டுமே தவிர விடுதலைக்கு எதிராகப் போராடிய அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணமாகியவர்களுக்கு சிலை வைப்பது பொருத்தமற்ற ஒரு செயற்பாடாகவே இருக்கும்.

எல்லோருக்கும் சிலை வைக்கவேண்டும் என கோருபவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கின்றேன். நான் அண்மையில் ஜேர்மனிக்குச் சென்றிருந்தேன். அங்கு நாசிப் படைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த அழிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத போல வேண்டுமானால் எமது விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டவர்களது அநியாயங்களைக் காட்சிப்படுத்தலாம். நாங்கள் இரண்டுவிதமான உதாரங்களை வைத்துக்கொண்டு முன்செல்ல முடியும். ஒன்று நாம் இவர்களைப் போல வரவேண்டும் என்பது. மற்றையது இவர்களைப் போல வந்துவிடாதே என கூறுவது. அங்கு கிட்லரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கிட்லர் போலே வந்துவிடாதே என ஜேர்மனிச் சிறுவர்களுக்குச் சொல்லப்படுகின்றது. அவ்வாறான விதத்திலும் நாங்கள் நினைவுச் சின்னங்களை உருவாக்கலாம்.

எமது கட்சி தேர்தல் பிரச்சாரங்களிலே பல விடையங்களைக் கூறியது. அதில் ஒன்று ஊழல். கடந்த காலங்களில் யாரும் ஊழல் செய்ததாக நாங்கள் இங்கு சொல்லவில்லை. ஊழல் செய்திருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருக்கின்றது. மக்களுடைய வரிப்பணம் மக்களுக்குச் சென்றடையவேண்டும் மக்களுடைய வரிப்பணத்தை எவரும் பயன்படுத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பின் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கத் தவறுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் நாங்களும் ஊழல் செய்வதற்கு வழிவிட்டவர்களாக மாறுவோம். யாரும் ஊழல் செய்தார்கள் என்று நான் கூறவில்லை. யாரும் ஊழல் செய்திருந்தால் அது கண்டறியப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

கடந்த நிர்வாகம் மட்டுமல்ல அதற்கு முன்னய கால முறைகேடுகள் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைகள் நடைபெற்றிருந்தன. அந்த அறிக்கைகள் இந்த அவைக்கு கொண்டுவரவேண்டும். அந்த அறிக்கைகள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. யாழ் மாநகரசபை தொடர்பில் விசாரணை நடைபெற்றிருப்பதாயின் அதனை யாழ் மாநகரசபை அதனைக் கோரிப் பெறப்பட்டு குற்றவாளிகள் இருப்பின் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

ஒற்றுமை என்ற விடயத்தில் பல்வேறு விடயங்களில் ஒன்றுமைகள் இருக்கின்றது. கொள்கைக்கான விடையம் எனும்போது இங்கு பலருக்கு அது சாத்தியமற்ற ஒன்று. இந்த உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் பல கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்திருந்தன. நாங்கள் மட்டும் உங்களது ஒற்றுமைக் கூட்டில் இணைந்திருக்கவில்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் ஒற்றுமையோடு தேசிய ரீதியான ஒற்றுமையாக எங்களை இழுத்துவிடாதீர்கள். நாங்கள் எமது தேசியம் சார்ந்த நிலைப்பாட்டிலிருந்து இந்த ஒற்றுமைக்குள் இணைந்துவிட முடியாது. எங்களுடைய கட்சியின் உருவாக்கமானது எங்களுடைய விடுதலைப் போராட்டம் எங்கு மௌனிக்கப்பட்டதோ அந்த இடத்திருந்து எமது உரிமைகளை முன்கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவே எமது கட்சி தொடங்கப்பட்டது. மக்கள் தங்கள் வாழ்வியலை சுயமாகக் கட்டியெழுப்பவேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகின்றோம். அதற்கான அதிகாரம் எம்மிடம் வரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகின்றோம் என்றார்.

Related Posts