தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் செயல்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!!

யாழ். சர்வதேச திரைப்பட விழா, தியாகி திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழா தொடர்பில், குறித்த கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் உரிமைக்காக திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய புனித நாட்களில் யாழ். திரைப்பட விழா நடாத்தப்படவுள்ளமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

உலகளாவிய ரீதியில் சினிமா இரசிகர்களாலும், சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களாலும், திரைப்பட விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. திரைப்பட விழாக்களின் கலைப்பெறுமதி மிக உயர்வாக உலக மக்கள் அனைவராலும் போற்றப்படுகின்றது.

அதன் பெறுமதியை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உணர்ந்து வரவேற்கின்றது, அதேவேளை, இலங்கைத்தீவில் கடந்த 7 தசாப்தங்களாக ஒடுக்கப்படுகின்ற தமிழ்த் தேசிய இனம் அந்த ஒடுக்கு முறையிலிருந்து விடுபட அதிஉச்ச தியாகங்களை செய்து போராடி வந்துள்ளது.

இன்றும் போராடிவருகின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பைக் காப்பதற்கான போராட்டத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியின் உச்சமான காலமாக கடந்த 2009 மே வரையான சுமார் முப்பது வருடங்கள் விலைமதிப்பற்ற அளப்பரிய தியாகங்களுடன் கடந்துள்ளதை அனைவரும் அறிவர்.

ஈழத் தமிழ் மக்கள் தங்கள் விடுதலை நோக்கிய பயணத்தில் பல மைல்கற்களை தாண்டினார்கள். அந்த மைல்கற்களில் ஒன்றாக, மிகமுக்கியமான நிகழ்வாக தியாக தீபம் திலீபன் அவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் வடிவம் பெற்றது.

நல்லூரின் வடக்கு வீதியில் 1987 புரட்டாதி 15ஆம் திகதி திலீபன் அவர்கள் தொடங்கிய தன்னுயிரை மெழுகாய் உருக்கிய தியாகப் பயணம் புரட்டாதி 26இல் தேசமே எழுச்சி கொள்ள, எம்மக்களையும், தான் நேசித்த மண்ணையும் விட்டுப்பிரிந்தார்.

அந்த தியாகி உயிர்பிரிந்த நகரில், உண்ணாவிரம் இருந்த நாட்களில், (புரட்டாதி 15 தொடக்கம் புரட்டாதி 20 வரை) யாழ் திரைப்பட விழாவை கொண்டாடுதல், எம்மக்களின் விடுதலைக்காக திலீபன் செய்த தியாகங்களை கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களின் தேசிய உணர்வை உதாசீனம் செய்து, எம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்வதாகவும் அமைகின்றது.

தியாகி திலீபன் அவர்கள் தமிழ் மக்களுக்காக தன்னுயிரை மெழுகாய் உருக்கிய நகரில், அதே நாட்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் யாழ். சர்வதேச திரைப்படவிழாவை நடாத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

இவ்விழாவினை இந்நாட்களில் நடாத்துவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினரிடம் வேண்டிக் கொள்கின்றோம் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts