திப்பு சுல்தான் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில், ரஜினிகாந்த் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடக்கிறது.
சரித்திர கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த ‘பாகுபலி’ படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இது தயாரிப்பாளர்களுக்கு வரலாற்றுப்படங்கள் எடுக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது. விஜய்யின் ‘புலி’ படமும் சரித்திரக்கதை பாணியில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திப்பு சுல்தான் வாழ்க்கையை சினிமா படமாக தயாரிக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. பிரபல கன்னட படஅதிபர் அசோக் கெனி இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இவர், அர்ஜுனை வைத்து கன்னடத்தில் ‘பிரசாத்’ என்ற படத்தை தயாரித்தவர்.
இதில், திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த தகவலை அசோக் கெனி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
‘‘திப்பு சுல்தான் வாழ்க்கையை படமாக்குவது எனது நீண்டநாள் கனவாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதற்காக ரஜினியை சில வருடங்களுக்கு முன்பு அணுகி பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படவேலைகளை தொடங்கமுடியவில்லை.
இந்த படம் தொடர்பாக ரஜினிகாந்தை மீண்டும் சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளேன். விரைவில் இந்த சந்திப்பு நடக்கும். அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.
திப்பு சுல்தானின் பெருமைகள் பலவற்றை இன்னும் உலகம் அறியாமல் இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கப்பல்களை பரிசாக கொடுத்த பெருமைக்கு உரியவர். திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்து, அந்த படம் உலகம் முழுவதும் திரையிடப்படுவதை நினைத்துப்பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
ராஜமவுலி மாதிரி ஒரு திறமையானவர் இந்த படத்தை டைரக்டு செய்யவேண்டும் என்று விரும்புகிறேன்’’.
இவ்வாறு அவர் கூறினார்.