யாழ் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் சரியான புள்ளி விபரங்களைப் பெறுவதற்கு முடியாது உள்ளதாக தேவை நாடும் மகளீர் அமைப்பின் கொழும்பு அலுவலக செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.தேவை நாடும் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் பால் நிலை வன்முறைகள் தொடர்பிலான ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்று யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதில் வளவாளராக கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
யாழ் . மாவட்டத்தில் எமது அமைப்பின் ஊடாக 6 இடங்களில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன்படி சாவகச்சேரி, நல்லூர் , காரைநகர், கோப்பாய் , சங்கானை, அராலி ஆகிய பிரதேசங்களில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இங்குள்ள மக்கள் பல்வேறு சூழ்நிலைக்கு மத்தியில் இருந்து வாழ்வாதாரத்தினைத் தேடுபவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் உதவிகளைச் செய்து வருகின்றன.எனினும் அவற்றை உரியமுறையில் வழங்குவதற்கு எமக்கு முடியாது உள்ளது.
ஏனெனில் இங்குள்ள திணைக்களங்களிடம் சரியான புள்ளி விபரங்கள் இல்லாமை. முக்கிய பிரச்சினையாக உள்ளது. அத்துடன் திணைக்களங்களில் இருக்கின்ற புள்ளி விபரங்களும் 100 வீதம் உண்மை என்று கூறமுடியாது.
இதனால் அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அவர்களது தற்போதைய தேவைகள், வருமானம் என்பனவற்றை அறியமுடியாது உள்ளது.
எனவே இங்குள்ள திணைக்களங்கள் இனிவரும் காலங்களிலாவது ஒவ்வொரு விடயங்கள் தொடர்பிலும் பூரணமான தரவுகளை ஆண்டு மற்றும் மாத ரீதியில் தயாரித்துக் கொள்ள வேண்டும் எனவும் செயற்றிட்ட இணைப்பாளர் கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்.
அத்துடன் தற்போது நாட்டில் அதிகரித்துள்ள சிறுவர், பால்நிலை மற்றும் குடும்ப வன்முறைகள் தொடர்பிலும் அதன் எதிர்காலத் தாக்கங்கள் தொடர்பிலும் விளக்கப்பட்டதுடன் இது போன்ற வன்முறைகளை சமுகத்தில் இருந்து நீக்குவதற்கு ஊடகங்கள் முழுதான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
அத்துடன் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் சட்டரீதியிலான திட்டங்களை இலவசமான முறையில் முன்னெடுப்பதற்கு எமது அமைப்புக்களை நாடுங்கள் என்றும் சம்பந்தப்பட்ட அமைப்பினர் சமூகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் கணவனை இழந்த பெண்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான உதவித் திட்டங்களை வங்கிகளின் ஊடாக வழங்கியுள்ளதாகவும் அத்துடன் உள வள அலோசனைகளையும் வழங்கி வருவதாகவும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலும் தேவை நாடும் மகளீர் அமைப்பு 2004 ஆம் ஆண்டில் இருந்து தமது சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவை நாடும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் என பலர் கலந்து கொண்டனர்.