திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தாவிடின் தவறவிட்டுவிடுவோம்: என்.வேதநாயகன்

மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கின்ற திட்டங்களை விரைந்து செயற்படுத்தி அவை மக்களை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தாவிடின் அவற்றை தவறவிட்டு விடுவோம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார்.

2018 ஆம் ஆண்டிற்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மக்களிற்கு தேவையானவற்றினை வழங்கவும், தேவைகள் உடைய மக்களை இனங்கண்டு மக்களுக்கு உரிய வகையில் சேவைகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மாத்திரமே, எந்த திட்டமாக இருந்தாலும், அந்த திட்டங்கள் வெற்றியளிக்கக் கூடியதாக இருக்கும்.

வினைத்திறனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவதன் மூலம் தான், எமதும், எமது மாவட்டத்தின் நோக்கங்களையும் அடைய முடியும்.

அரசின் கொள்கைகளை அமுல்படுத்தும் வகையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் செயற்பட்டு மக்களின் வாழ்வாதார தேவைகளையும் வாழ்வியல்களையும் உயர்த்த வேண்டும். யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கூடிய வகையில், இந்த ஆண்டு அமைய வேண்டும்.

எமது திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தாவிடின், அந்த செயற்பாடுகளை தவறவிட்டுவிடுவோம்.

2018 ஆம் ஆண்டில் நிலைபேறான பொருளாதாரத்தினை அடையும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஜனாதிபதி செயலகத்தினால் இந்த வருடம் ‘நிலையான அபிவிருத்தியும், நிலைபேறான விவசாய அபிவிருத்தியும்’ எனும் தொனிப்பொருளில், செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் 2018 ஆம் ஆண்டில் தரிசு நிலங்களை இணங்கண்டும், ஏற்கனவே, செய்கையிடப்படுகின்ற நிலங்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய வகையில், செயற்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது.

எமது மக்களிடையே நிலையான விவசாய அபிவிருத்தியைச் செய்வதற்கு எமது உத்தியோகத்தர்கள் அனைவரினதும், வினைத்திறனான, அர்ப்பணிப்புள்ள சேவை மிக முக்கியமானது.

அந்தவகையில், 2018 ஆம் ஆண்டில் மக்களுக்கு வினைதிறனான செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் நிலையான விவசாய அபிவிருத்தியில் எமது மாவட்டத்தினை யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைப் போன்று மீண்டும் கொண்டுவர வேண்டும்.

எனவே, இலக்கினை அடைவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் அவசியம், அந்தவகையில் 2018 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை அடைவதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts