எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது.
எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றம் காரணமான அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முடிவை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.
அசாதாரண காலநிலைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த முடிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் யாரேனும் இயற்கைச் சீற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் அவர்களின் பணியை ஏனைய அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.