விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை அமர்வில், முதன்முறையாக நேற்றையதினம் பங்கேற்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையில், தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கூடியது.
இந்த அமர்வில் பங்கேற்பதற்காக, மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துவரப்பட்டார்.
வழமையாகக் கைவிலங்கிடப்பட்டு அழைத்துவரப்படும் அவர், நேற்றையதினம் கைவிலங்கிடப்படாமல், பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.
இதன்போது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், அவரைப் புகைப்படம் எடுத்தனர். சற்றுக் கோபமடைந்த அவர், புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை கடுந்தொனியில், ‘நீ யார்? எந்த ஊடகம்?’ எனக்கேட்டு, கையையும் ஓங்கிவிட்டார்.
எனினும், பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிஸார் இருவரும் அவரைத் தடுத்து, சபைக்குள் அழைத்துச் சென்றுவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கும்போது, சுவிஸில் இருந்து நடத்தப்படும் இணையத்தளத்தை, மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வருவதாகவும் இவர், தான் மாகாண சபைக்கு வரும்போது படம் எடுத்து, தம்மைத் தரக்குறைவாக எழுதி வருகின்றார் என்றார்.
அவ்வாறான ஓர் இணையத்தளச் செய்தியாளராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பேசிவிட்டேன் என்றார். அத்துடன், பொலிஸ் பாதுகாப்புடன் வரும் தான், மற்றவர்களை எவ்வாறு தாக்குவது எனவும் தெரிவித்தார்.
26.4.2016 அன்று நடைபெற்ற மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வுக்கும் 4.5.2016 அன்று நடைபெற்ற விசேட கிழக்கு மாகாண சபை அமர்வுக்கும் வருகைதந்திருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன், அதன் பின்னர் நேற்றைய தினமே சமுகமளித்தார்.