தொண்டு நிறுவன ஊழியர் எனக்கூறி சேந்தாங்குளத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி அப்பெண்ணின் கைப்பைக்குள் இருந்த தாலிக்கொடியை திருடிய சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இளவாலை சேந்தாங்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் வீடு ஒன்று கட்டிக்கொண்டு, அருகில் குடிசையில் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி, மேற்படி பெண்ணின் அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர், ‘தான் தொண்டு நிறுவன ஊழியர் எனவும், கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டை பார்வையிட வந்துள்ளதாகவும் உடனடியாக கட்டப்படும் வீட்டுக்குள் வாருங்கள்’ என அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அவசரத்தில் அந்தப் பெண், தனது கைப்பையை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு செல்ல, அப்பகுதியில் ஒளிந்திருந்த அலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபர், பெண்ணின் கைப்பைக்குள் இருந்த தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளார்.
தாலிக்கொடி திருடப்பட்டமை தொடர்பில் மேற்படி பெண் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டில் அலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னரே தனது தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீதிமன்ற அனுமதியைப் பெற்று, அலைபேசி நிறுவனத்தில் இலக்கத்துக்குரிய உரிமையாளரின் விபரங்களைப் பெற்று, அந்த உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.