தாய், மகளை கொன்று கொள்ளை!! 13 வருடங்களின் பின் சிக்கிய இலங்கை அகதி

தமிழகத்தில் தாய் மற்றும் மகளை கொன்று கொள்ளையடித்த வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அகதி ஒருவர் சிக்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் ஸ்பென்சர்காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்த துரை என்பவரின் மனைவி பூங்கோதை. இவர்களின் 3 வயது குழந்தை ஜனப்பிரியா. கடந்த 2003–ம் ஆண்டு பூங்கோதையும், ஜனப்பிரியாவும் வீட்டில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் கொன்று, வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தது. இது குறித்து நகர் வடக்கு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மமே நீடித்து வந்தது.

இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பிறகு கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில், இதே போல பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்று ஒரு கும்பல் கொள்ளையடித்தது. இதில் ஈடுபட்ட ராபரி முரளி என்ற முரளி, தங்கபாண்டி (சம்பவத்தின்போது இவருக்கு 12 வயது), கரூர் ராயனூர் அகதிகள் முகாமை சேர்ந்த தற்கொலை குமார் என்ற குமார் ஆகியோரை கரூர் மாவட்ட பொலிசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கரூர் வழக்கில் அவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டனர். அகதி என்பதால் குமார் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார், தமிழக ஊடகமான தினத்தந்தி செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த நிலையில், இரட்டை கொலை வழக்கில் அவரை கைது செய்ய திண்டுக்கல் நகர் வடக்கு பொலிசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து இரட்டை கொலை வழக்கில் குமாரை கைது செய்தனர். இதையொட்டி, அவரை திண்டுக்கல் கோர்ட்டில் பொலிசார் ஆஜர்படுத்தினர். இந்தக் கொலை நடந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts