இலங்கையிலுள்ள அனைவரும் தங்கள் கடமைகளை தமது தாய் மொழியில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள், தற்போதய அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஆர்.ஹேவகே, திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.
தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலமர்வு கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்றது.
இந்த செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
மொழி உரிமைகள் தொடர்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இந்த அரசாங்கத்தால் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு செயற்படுத்தப்படுகின்றது.
தாய்மொழியுடன் பிறமொழிகளையும் கற்றுக்கொள்ள ஏதுவாக அமைச்சால் கிராமிய மொழி சங்கங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. அந்த சங்கங்களுக்கு மொழிகளை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அத்துடன், அமைச்சின் வடமாகாண மத்திய நிலையம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது. இதன் மூலம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் மொழிகள் தொடர்பில் அதிக பயன்களை பெறக்கூடிய வகையிலுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் செல்வி. சிவகாமி இராஜதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம மட்ட மொழி சங்கங்களின் ஆசிரியர்கள், அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.