தாயின் தவறால் சிசு மரணம்! வைத்தியர்களின் செயற்பாடு தொடர்பில் கவலை!

இளம் தாயின் சிறு தவறினால், 14 நாட்களேயான ஆண்சிசுவொன்று, பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் (15) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால், யாழ்ப்பாணம், நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த கபில்ராஜ் வயசன் என்ற 14 நாட்களேயான சிசு மரணமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதிதாக திருமணம் முடித்த இளம் பெண்ணுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 31ஆம் திகதியன்று ஆண் குழந்தையொன்று பிறந்தது.

குழந்தை, பிறக்கவேண்டிய காலத்துக்கு முன்னர் பிறந்ததினால் வைத்தியர்களினால், அக்குழந்தைக்கு வழங்குவதற்காக மாத்திரைகள் சில வழங்கப்பட்டிருந்தன. இதேநேரத்தில், குழந்தையை பிரசவித்த தருணத்தில், அக்குழந்தையின் தாய், உயர்குருதி அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தமையால், அதனை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வைத்தியரினால் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், கடந்த 13ஆம் திகதி இரவு 6 மணியளவில், அத்தாய் சிசுவுக்கு மாத்திரை வழங்கியுள்ளார்.

எனினும், மறுநாள் அதிகாலை 2 மணியளவில், அச்சிசு அழுதுள்ளது. அழுகையை நிறுத்துவதற்காக, தாய்பாலை அத்தாய் ஊட்டியுள்ளார். அழுகையை நிறுத்தாத அந்த சிசு வீரிட்டு அழுத்து கொண்டே இருந்ததுடன் மூச்செடுப்பதற்கும் அவதி பட்டுள்ளது.

சந்தேகம் கொண்ட, பெற்றோர் அச்சிசுவை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்து சென்றுள்ளனர். எனினும், அங்கிருந்த வைத்தியர்கள் மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு அச்சிசுவை மாற்றியுள்ளனர். எனினும், சிகிச்சைகள் பலனின்றி அச்சிசு அங்கு உயிரிழந்துள்ளது.

மல்லாகம் நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய, இறப்பு விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்று பரிசோதனையின் பின்னர், சிசுவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், தன்னுடைய குழந்தை தொடர்ச்சியாக வீரிட்டு அழுதுகொண்டிருந்தமையால் சற்று பதற்றமடைந்த அந்த இளம் தாய், குழந்தைக்கு கொடுக்கவேண்டிய மாத்திரைக்கு பதிலாக, தனக்கு வழங்கிய மாத்திரையை வழங்கியிருப்பதாக விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வைத்தியரினால், தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் வழங்கப்பட்ட மாத்திரைகள் ஒரே மாதிரியாக இருந்தமையால், அவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தினை, பதற்றமடைந்திருந்த தன்னால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது போய்விட்டதாகவும் அத்தாய் தெரிவித்துள்ளார்.

சிசுகளுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக பாணி அல்லது சொட்டு மருந்துகளே வழங்குவதற்கு, வைத்தியர்களினால் அதிகளவு பரிந்துரை செய்யப்படும் என்று சுட்டிக்காட்டிய பெற்றோர். தங்களுடைய குழந்தைக்கு மாத்திரை வழங்கப்பட்டது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Posts