தாயகத்தில் எங்களை நாங்களே ஆளவேண்டும் இராணுவம் இங்கிருந்து வெளியேற வேண்டும்

எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார். யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது உணர்வுகளை ஜனநாயக ரீதியில் தமது வளாகத்துக்குள் வெளிக்காட்ட முன்வந்தனர். இதனைத் தடுத்த இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக உள்ளே புகுந்து பல்கலைக்கழக மாணர்களைத் தாக்கினர்.

இராணுவம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை. இவர்கள் அழைக்கப்படவுமில்லை. இராணுவத்தினரின் இந்த அடாவடிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த உதயன் ஆசிரியர் தாக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக கேள்வியுற்று சம்பவ இடத்துக்குச் சென்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தடுக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்து 3 ஆண்டுகளில் யாழ். மாவட்டத்தில் பல கடத்தல்கள், கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஆதாரங்களுடன் அடையாளப்படுத்தப்பட்ட போதும் அவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதுவரையில் எங்களது போராட்டங்கள் ஓயாது தொடரும். நாம் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்த நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது:

இலங்கை இராணுவத்தின் 75 சத வீதத்தினர் தமிழர் தாயகப் பகுதியான வடக்கில் நிலை கொண்டுள்ளனர். போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்தும் இங்கு இராணுவத்தினருக்கு என்ன வேலையிருக்கின்றது. இராணுவம் வடக்கில் இருக்கும் வரையில் இங்கு ஜனநாயகம் இருக்காது.

சர்வதேசத்துக்கு இந்த விடயம் சரியாக எடுத்துச் செல்லப்பட்டு இங்கிருந்து இராணுவம் வெளியேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்க வேண்டுமாக இருந்தால், ஊடக சுதந்திரம் கிடைக்க வேண்டுமாக இருந்தால், இங்கிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றார்.

பின்னர் உரை நிகழ்த்திய சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.பாலகிருஸ்ணன் தெரிவித்ததாவது:
வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் எந்தப் பகுதியிலுமே தற்போது ஜனநாயகம் இல்லை. ஜனநாயகம் எனும் போர்வையில் இன அழிப்பும், அடக்குமுறையும் தான் நடக்கிறது.

வடக்கு, கிழக்கில் மக்களைக் கூண்டோடு அழித்து அங்கு தமிழர்கள் வாழ்ந்தார்களா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமை உருவாகிக்கொண்டிருக்கிறது
பொதுமக்களை அடக்கி விட்டால் உரிமை பற்றிக் கேட்கமாட்டார்கள் என்று அரசு நினைக்கிறது. அந்த நிலைமை மெல்ல மாறுபடுகிறது. போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு அரசுதான் காரணம். எம்மை நாம்தான் காப்பாற்ற வேண்டும்.

எமது சொந்தப் பிரச்சினைகளை மட்டும் கவனிக்காது எதிர்காலச் சந்ததிக்காக எதிர்கால விடிவுக்காக ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். அதனைச் செய்ய முடியாதவர்கள் ஏனையவர்களுக்கு உபத்திரம் கொடுக்காமல் இருங்கள் என்றார்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் உரையாற்றும்போது தெரிவித்ததாவது;
யாழ். நூலகத்தை எரிப்பதில் ஆரம்பித்து இன்று மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை முடங்க வைப்பது வரை அரச வன்முறை தொடர்கிறது. மாணவர்கள் அமைதியான முறையில் எதிர்ப்புக் காட்டினார்கள். மாணவர் கல்வி திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

அதன் உச்சக்கட்டமாகவே நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுவது போன்று உள்ளது. எங்கேயோ நடந்த ஏதோ ஒரு பிரச்சினைக்காக எமது மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

எமது கட்சிகள் ஒன்றுசேர்ந்து போராடுவது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது என்றார்.
நவசமசமாஜக் கட்சியின் வடமாகாண இணைப்பாளர் ஜெனகன் உரையாற்றுகையில்;
அரசியல் கைதிகள் விடயம், காணாமற்போனவர்களது துயரம், நில ஆக்கிரமிப்புப் போன்று மாணவர் கைதும் மிக முக்கியமான பிரச்சினை. முன்னர் ஒரு காலத்தில் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தென்னிலங்கையில் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் தமிழர்கள் என்ற காரணத்துக்காக எமக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Posts