தாயகத்தின் கலாசாரம் பேணத் தயாராகிறது தமிழ் மக்கள் பேரவை!- அனைவரையும் ஒன்றுசேர அழைப்பு

தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

தமிழ் மக்கள் பேரவையானது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை வலுவாக முன்னெடுக்கவுள்ளது.

அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும், நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தது.

அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் சமநேரத்தில் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்களடங்கிய உபகுழுவை அமைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இக்குழுவில் கலை, கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்களை இணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

ஒரு இனத்தின் எதிர்கால வளமும், வாழ்வியலும் தனித்து அரசியல் உரிமைகளால் மட்டும் தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை.

மாறாக அந்த இனத்தின் மரபுரிமைகளும் கலை, கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களும் கட்டிக் காக்கப்படுவதிலும் தங்கியுள்ளதென்ற உண்மையை நாம் ஒருபோதும் மறந்து விடலாகாது.

இன்றைய சமகால சூழ்நிலையில் எங்கள் இளம் சமூகத்தை வழிப்படுத்துவதில் ஓர் ஆரோக்கியமான சூழமைவு இருப்பதாகத் தெரியவில்லை.

எச்சந்தர்ப்பத்திலும் எங்கள் இளைஞர்கள் தடம் மாறிப் பயணிக்கக்கூடிய மிக மோசமான சூழ்நிலை காணப்படுகின்றது.

எனவே இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டி எங்கள் இளம் சமூகத்தினை ஆற்றுப்படுத்துவதன் தேவைக்காக, எங்கள் பண்பாட்டு அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதும் காப்பாற்றுவதும் நடைமுறைக்குச் சாத்தியமாக்குவதும் காலத்தின் கட்டாய தேவையாகும்.

இவ்வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலை, கலாசாரத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.

கலைத்துவப் படைப்புகளும் அதற்கான சந்தர்ப்பங்களும் எங்கள் இளம் சமூகத்தை நிச்சயம் வழிப்படுத்தும் என்பதனைக் கருத்திற் கொண்டு தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் கலை, கலாசாரப் பணிக்கு தமிழ் மக்களாகிய உங்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளையும் ஆதரவினையும் வேண்டி நிற்கின்றோம்.

இதற்காக நீங்கள் 0756993212 அல்லது 0710145723 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது kalaachchaaram@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.

எங்கள் மாணவர்களை – இளைஞர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் தமிழினம் கல்வி, பொருளாதாரம், சமூக உறவு என்ற பலபரிமாணங்களில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும்.

இந்நம்பிக்கையை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

எங்கள் கலாசாரத்தின், பண்பாட்டின் கட்டுமானங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படுமாயின் எங்கள் இளம் சமூகத்தினை நல்வழிப்படுத்துவதென்பது மிக எளிமையான விடயம் என்ற அசையாத நம்பிக்கையோடு உங்கள் அனைவரதும் ஆதரவினைத் தமிழ் மக்கள் பேரவை இவ்விடத்தில் வேண்டி நிற்கின்றது.

Related Posts