தாமதமாக பாடசாலைக்கு வந்த ஆசிரியர்களை தண்டித்த அதிபர்

கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர்.

இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அதிபருடன் முரண்பட்ட நிலையில் வாயிற் கதவு திறக்கப்பட்டு ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் வழமையான நடவடிக்கைக்கு அமைவாக நாளாந்த வரவு பதிவேட்டில் காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு அதிபரினாலோ அல்லது பொறுப்பான ஆசிரியர் ஒருவரினாலோ சிவப்பு கோடு இடப்படுவது வழக்கம்.

இதன் பின்னர் வருகைதரும் ஆசிரியர்கள் குறுகிய விடுமுறை அல்லது விடுமுறையாக கருதப்படுவது வழக்கமான நடவடிக்கை. ஆனால் குறித்த அதிபர் அதற்கு புறம்பாக வாயிற்கதவைப் பூட்டி வெளியில் விடுவது ஆசிரியர்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இரண்டு மூன்று பேரூந்துகள் எடுத்து வருகின்ற ஆசிரியர்கள் சில வேளைகளில் சில நிமிடங்கள் தாமதமாகலாம் இவ்வாறான நேரங்களில் வழமையாக அன்றி ஒரு சில சந்தர்ப்பங்களில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டும் ஆனால் அதனை விடுத்து இவ்வாறு நடந்துகொள்ளவது விசுவாசத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்களின் செயற்பாடுகளில் பாதிப்பையே ஏற்படுத்தும் என பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts