தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரம்: யாழ் மாணவனின் அரிய கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாயபீட மாணவனொருவன் அரிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளார். தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரமொன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். விவசாயபீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல்துறை மாணவனான வாகீசன் டிவாகர் இதனை கண்டுபிடித்துள்ளார்.

egg_kunju_01

இவர் யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர்.

இதுவரை பாவனையில் உள்ள தானியங்கி முட்டைபொரிக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் விட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும், அதிக வசதிகளை கொண்டதாகவும், குறைவான விலையை கொண்டதுமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் வடக்கிற்கு தேவையான கோழிக்குஞ்சுகள் தென்பகுதியிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. யாழில் உள்ள அச்சுவேலி பகுதியிலுள்ள நிலையத்தில் கோழிக்குஞ்சு உற்பத்தி நடக்கின்ற போதும், அங்கு இந்திய தயாரிப்பான இயந்திரங்களே பாவனையில் உள்ளன. இலங்கையில் தற்போது இந்த வகை இயந்திரங்களே பாவனையில் உள்ளன.

பாவனையில் உள்ள இந்த இயந்திரத்தில் முட்டைகளை வைத்தாலும், குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவற்றை பக்கம் மாற்றி வைக்க வேண்டியுள்ளது. அதிக மின்சாரத்தை உறிஞ்சுபவையாக உள்ளன.

தற்போது யாழ்.மாணவன் தயாரித்த இயந்திரத்தில் அதிக வசதிகள் உள்ளன. முட்டைகளை பக்கம் மாற்றி வைக்கத் வேண்டியதில்லை. தானே அதனை செய்து கொள்ளும். இந்த இயந்திரத்திற்குள் ஒரு தடவையில் 120 முட்டைகளை வைக்க முடியும். அத்துடன் இயந்திரத்திற்குள் பகுதி ஈரப்பதனிற்கு தண்ணீர் வைக்கத் தேவையில்லை. தானியங்கி வெப்பநிலை சீர்படுத்தியை கொண்டுள்ளது.

அத்துடன் இது மிகக்குறைந்த சக்தியில் சூரியஒளியில் இயங்ககூடியது. பற்றரி மூலமும் இயக்கலாம். 12V DC மின்சாரத்தில் இயங்கக்கூடியது.

அத்துடன் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி உணர்திறன் கருவியின் மூலம், இயந்திரத்திற்கு முன்பாக ஒருவர் சென்றாலே, வாசிப்புக்களை தானே காட்டும். மனிதர் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றால், தானே நிறுத்திக் கொள்ளும்.

இந்த இயந்திரத்தை பரிசோதித்தபோது, இதுவரை பாவனையில் உள்ள இயந்திரங்களை விட முட்டைகள் குஞ்சாகும் பொறிதன்மை அதிகமாகவும் காணப்பட்டுள்ளது. 81வீத பொறி தன்மையை கொண்டுள்ளது.

அத்துடன் இதன் உற்பத்தி செலவும் மலிவாக உள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் இந்த இயந்திரத்தை மலிவான விலையில் கொள்வனவு செய்ய முடியுமென்பது கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்களிற்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம், புதிய அடையாளங்களை ஏற்படுத்தும் நம்மவர்களை உற்சாகப்படுத்துவதும் எங்கள் எல்லோரதும் கடமையுமாகும்.

Related Posts