வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து மாகாண சபைக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து அப்பிரதேசத்தில் விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டு அங்கிருந்துதான் மக்களுக்குத் தேவையான விதைகள் மற்றும் பழமரக்கன்றுகள் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு நாடுபூராகவும் விநியோகிக்கப்பட்டுவருகின்றது. இதைவிட இங்கு விவசாயம் சம்பந்தமான ஆராய்ச்சி வேலைகளும் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக இலங்கை மத்தியவங்கி இதனை ஒரு விவசாய நிலமாகவே பிரகடணப்படுத்தியுமுள்ளது.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் சாள்ஸ் என்பவர் அரசாங்க அதிபராக இருந்தசமயத்தில் பொருளாதார வர்த்தக மையம் அமைப்பதற்காக ஓமந்தைப் பகுதியில் அரசாங்க உத்தியோகத்தர் வீட்டுத்திட்டத்திற்கு அண்மையில் நிலம் ஒதுக்கியிருந்தார்.
ஆனால், வவுனியா மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் 2000 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவிருக்கும் பொருளாதார வர்த்தக மையம் அமைப்பதற்கு மத்திய அரசு கோரியுள்ள தாண்டிக்குளம் காணியை வழங்காவிட்டால், இந்த நிதியானது வேறு மாவட்டத்திற்குச் செல்வதை தவிர்க்கமுடியாது எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இது ஒரு விவசாய நிலமாகையால் இதனை பொருளாதார வர்த்தக மையத்துக்கு வழங்கமுடியாதெனவும், பொருளாதார வர்த்தக மையத்திற்குரிய காணி ஓமந்தையில் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிக்கையில், தான் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் இது தொடர்பில் கதைத்ததாகவும் அவர் பொருளாதார வர்த்தக மையத்துக்கு ஓமந்தைக் காணியைவிட தாண்டிக்குளம் காணியே பொருத்தமானது எனவும் அப்படி தாண்டிக்குள காணியைத் தராவிட்டால் குறிப்பிட்ட நிதியானது வேறு மாவட்டத்திற்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மையம் அமைப்பதற்குரிய நிலம் தொடர்பில் இழுபறி நிலை காணப்படுவதால், இது தொடர்பில் இன்று சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவர்களை தான் சந்திக்கவிருப்பதாகவும், இதன்போது பொருளாதார வர்த்தக மையத்திற்குரிய காணிதொடர்பில் அவருடன் கதைப்பதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாண்டிக்குள விவசாயப் பண்ணையானது பொருளாதார வர்த்தக மையமாக மாற்றப்பட்டால், வடக்கு மாகாண விவசாயத்தின் ஆதாரமான ஒரு தொகுதி நிலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும்.
தாண்டிக்குள விவசாயப் பண்ணையில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைக்கப்படாவிட்டால் நிதியானது வேறு மாவட்டத்திற்குக் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதிலிருந்து இந்த நிதியை வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்காமல் ஒரு சிங்களப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கமாகவும் கருதலாம். (அதற்கு இது ஒரு காரணமாகவும் தெரிவிக்கப்படலாம்)
வடக்கு மாகாணத்துக்கு உரிமையுள்ள ஒரு காணியை வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சுகாதார அமைச்சர் எவ்வாறு மத்திய அரசுக்கு அந்தக் காணியை எழுதிக் கொடுக்கமுடியும்? இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துபவர்கள் யார்?