தாஜுதீன் படுகொலையின் பிரதான சூத்திரதாரி நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவின் பூரண ஒத்துழைப்புடனேயே பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன எனவும், அந்தக் கோணத்தில் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாமல் ராஜபக்‌ஷவின் ஏற்பாட்டின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்புப் படையின் (PSD) 8 முன்னாள் உத்தியோகத்தர்கள் தாஜுதீனைக் கடத்திச் சென்று மிருகத்தனமாகத் தாக்கிப் படுகொலை செய்த பின் சடலத்தை அவரது காரில் போட்டு தீமூட்டியுள்ளனாட் என சாட்சியங்கள் கிடைத்துள்ளன என்று தெரியவருகின்றது.

அத்துடன் இந்தக் கொலை ஜனாதிபதி பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தவரும் அன்றைய பிரபல அரசியல்வாதியொருவரின் சாரதியுமான இராணுவத்தினர் ஒருவரின் திட்டப்படியே நடந்துள்ளது எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நடந்த இந்தப் படுகொலை விபத்து மரணம் எனவும், விபத்தின் பின் தாஜுதீனின் கார் தீப்பற்றி எரிந்துவிட்டது எனவும் ஜோடிக்கப்பட்டிருந்ததுடன் மேலதிக விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டிருந்தன. எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு பதவிக்கு வந்தபின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அந்தச் சம்பவம் மீண்டும் கிளறி எடுக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டபின் அது திட்டமிடப்பட்ட படுகொலை என ஊர்ஜிதமானது.

இந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர்களை 30 நாட்களுக்குள் கைதுசெய்யுமாறு கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின்போது தாஜுதீன் படுகொலை நாமல் ராஜபக்‌ஷவின் ஆலோசனையின் பேரில் 8 முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் படையினரால் கூட்டாகச் செய்யப்பட்டிருகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Posts