தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (27.11.2012) செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியமை மற்றும் மேற்படி சம்பவங்களைக் கண்டித்து (28.11.2012) புதன்கிழமை அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் கோரமான முறையில் தாக்கியமையைக் கண்டிக்கும் முகமாகவும் மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்கள் தாக்கப்பட்டமை, காரை நகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் அவர்களது வீடு எரிக்கப்பட்டைமை ஆகியவற்றை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 03.12.2012 அன்று திங்கட்கிழமை மு.ப 10 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலருகில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

யுத்தம் முடிந்தும் 3 ஆண்டுகளுக்கு பின்னும் ஜனநாயக முறைமையில் குந்தகம் விளைவிக்கின்றமை ஆகியவற்றைக் கண்டித்து இடம்பெறும் இப்போராட்டத்திற்கு ஜனநாயக விரும்பிகள் அனைவரையும் இனத்துவம் கடந்து சகோதரத்துவ முறையில் பங்குகொண்டு எமது ஜனநாயக உரிமைக் குரலுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts