தாக்குதல் குறித்த விசாரணைகள் – ஜனாதிபதிக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்கள்!

பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இங்கு சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு 2018 நவம்பர் 13ஆம் திகதி முதல் அழைக்கப்படவில்லை. அவர்களை அழைக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் கூறினார்.

அன்று முதல் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிவரை தேசிய பாதுகாப்புச் சபையின் நான்கு கூட்டங்கள் நடந்தன.

இரண்டு தடவைகள் நான் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விளக்கிக்கூற முயன்றேன். ஆனால், அரச புலனாய்வுப் பணிப்பாளர் தம்மிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டதாக ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.

நான் பதவியில் இருந்த ஐந்து மாத காலத்தில் புலனாய்வுத் தகவல்களை ஜனாதிபதிக்கு விபரிக்கும் நடைமுறை இருந்ததில்லை. அரச புலனாய்வுத்துறைப் பணிப்பாளருக்கும் ஜனாதிபதிக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. நான்கு வருட காலம் ஜனாதிபதிக்குப் புலனாய்வுத் தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.

இவ்வருட பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் நாடுகடத்தப்பட்டு பாதாள உலகக்குழுத் தலைவர் மாக்கந்துரே மதூஷ் குறித்துதான் அதிக நேரம் பேசப்பட்டது.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதியில் இருந்தே தாக்குதல் அச்சுறுத்தல் இருந்ததால் வழமைபோல அந்தத் தகவலையும் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்குக் கூறியிருக்கும் என நான் ஊகித்தேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பிரதமர் என்னைச் சந்திக்க அழைத்திருந்தார். அவரைச் சந்திக்கச் செல்ல ஜனாதிபதி என்னை அனுமதிக்கவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts