கிளிநொச்சி-பூநகரிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த நிலையைப் போக்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை பூநகரி கமக்கார அமைப்பின் தலைவரும் சமாதான நீதவானுமான செல்வராஜா முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட ஞானிமடம், நல்லூர், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி, ஆலங்கேணி போன்ற பகுதிகளில் குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
பிரதேச சபையினால் வேறு இடங்களிலிருந்து குடிநீர் கொண்டவரப்பட்டாலும், அது போதியளவாகக் காணப்படவில்லையென்றும், இதனால் இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்த் தட்டுப்பாடு காரணமாக பூநகரி வைத்தியசாலையிலிருந்து நோயாளர்கள் கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரிக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும், இதனால் மக்கள் பெரும் இடர்களைச் சந்தித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன் பூநகரிப் பிரதேசத்தில் இருந்த ஒரேயொரு நன்நீர்க் கிணறும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், நீர்ப்பிரச்சனைக்கு அதுவும் ஒரு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.