தவறு செய்த தந்தை : நண்பிகளின் கேலியால் தற்கொலை செய்த மகள்!!!

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் மகளை, மாணவிகள் கேலி செய்தமையால் மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.

சுருக்கிட்டுக் கொண்டு ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் பத்து தினங்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேசத்தினைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இம்மாணவி சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளதோடு இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையின் மாணவத் தலைவியாகவும் செயற்பட்ட இம்மாணவி படிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

இம்மாணவியின் தந்தை சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்குள்ளாகி நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் குறித்த மாணவியின் தந்தையின் செயலைச் சுட்டிக்காட்டி அம்மாணவியின் பாடசாலை நண்பர் நண்பிகள் அடிக்கடி இம்மாணவியை கேலி செய்துள்ளதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்த மாணவி கடந்த 15ஆம் திகதி பகல் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்து தாயைக் கட்டி அணைத்துக் கொண்டு “அம்மா, இனிமேல் என்னால் பாடசாலை செல்ல முடியாது, நண்பர்கள் கேலி பண்ணுகின்றார்கள் என அழுதுள்ளதாகவும், அதன் பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை அவதானித்து உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி நேற்று இம்மாணவி உயிரிழந்துள்ளார்.

இம்மாணவியின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதணை நேற்று மாலை சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றதோடு சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts