தவறுகளை திருத்திக் கொண்டு அபிவிருத்தியை முன்னெடுங்கள் – டக்ளஸ்

தவறுகளை இனங்கண்டு அவற்றைத் திருத்தி அமைத்துக் கொள்வதன் ஊடாகவும், தவறுகள் விடப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக் கொள்வதன் ஊடாகவும் இப்பகுதியில் பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்த இயலுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

dau5

வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றய தினம் அமைச்சரின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இப்பகுதியில் நிலவுகின்ற இணக்கமான அரசியல் சூழ்நிலையைக் கருதி பல்வேறு உதவிகளை எம்மால் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் உதவிகள் அனைத்தையும் மக்களது உச்சபயன்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களினூடாக பயன்படுத்த அரச அதிகாரிகள் முன்வர வேண்டும். தவறான திட்டங்களுக்கும் மக்களுக்குப் பயன் கிட்டாத திட்டங்களுக்கும் யாரும் துணைபோகக் கூடாது. கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் நன்கு பயன்படுத்தி, மேலும் பல சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வதற்கு நாம் முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செயலர் பிரிவுகள் வாரியாகவும் வாழ்வின் எழுச்சித் திட்டம் தொடர்பிலான முன்னேற்ற விபரங்கள் தனித்தனியாக முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலர்கள் சமுர்த்தி அதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா, உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts